கருப்பூர் கோயில் நிலத்தில் 150 பனை மரங்களை வெட்டிய அர்ச்சகர் உட்பட 6 பேர் கைது

ஓமலூர், டிச.3: ஓமலூர் அருகே கோயில் நிலத்தில் இருந்த பனை மரங்களை வெட்டி கடத்திய அர்ச்சகர் உள்பட 6 பேரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள கருப்பூரில் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமாக, அதே பகுதியில் 8.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன. கோயில்  பரம்பரை அறங்காவலர் கல்யாணசுந்தரம், கோயில் நிலத்தை பராமரித்து வந்தார். இதனிடையே, கோயில் நிலத்திலிருந்த பனைமரங்களை வெட்டி கடத்துவதாக திருத்தொண்டர் பேரவை நிறுவனர்அல்லிகுட்டை ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, சுமார் 150 பனை மரங்களை வேருடன் பிடுங்கி வீசப்பட்டு கிடந்தது. அந்த மரங்களை சிலர் வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தனர்.

இதையடுத்து, போலீசார், வருவாய்த்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கோயில் அர்ச்சகர் கீர்த்திவாசன் மரங்களை வெட்டியதை ஒப்புக்கொண்டார். இந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெற்றதால் இங்குள்ள மரங்களை வெட்டியதாக கூறியுள்ளார். இதையடுத்து, ஓமலூர் சரகஅறநிலையத்துறை ஆய்வாளர் கேசவநாராயணா, கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், கோயில் அறங்காவலரின் மகன் பூசாரி கீர்த்திவாசன், வெட்டிய மரங்களை ஏற்றி செல்ல வந்த டிராக்டர் டிரைவர்கள் பச்சனம்பட்டி மாரிமுத்து, ஆட்டுக்காரனூர் வேலுசாமி, மரங்களை விலைக்கு வாங்கிய திண்டமங்கலம் பழனிசாமி, தொளசம்பட்டி பொன்னுசாமி, ஊ.மாரமங்கலம் துளசி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், ₹3.5 லட்சம் மதிப்புள்ள வெட்டப்பட்ட மரங்களையும், 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>