×

முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 14 ஆயிரம் பேருக்கு கோழிகள்

நெல்லை, டிச. 3: சங்கரன்கோவில் ஒன்றிய கூட்டரங்கில், கால்நடைத்துறை சார்பில் புறக்கடை கோழிகள் வழங்கும் விழா கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜலட்சுமி, முதல்வர் சிறப்புத் திட்டத்தின் கீழ் தேர்வான பயனாளிகள் 80 பேருக்கு ரூ.1.64 லட்சம் மதிப்பில் தலா 25 கோழிகள் வீதம் 2 ஆயிரம்  கோழிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மகளிரில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு விலையில்லா அசில் கோழியின குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. சென்னையை தவிர கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இவ்வாறு வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 385 ஒன்றியங்கள், 528 பேரூராட்சிகளில் இவ்வாறு நூறு சதவீத மானியத்தில் 2.40 லட்சம் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.1875 மதிப்புள்ள 25 கோழிக்குஞ்சுகள், பயிற்சி ஊக்கத்தொகை ரூ.150 கணக்கிட்டு வழங்க ரூ.20 மற்றும் புகைப்பட செலவு ரூ.30 என மொத்தம் ரூ.2075 செலவிடப்படுகிறது. 1000-1250 முட்டைகள் தனது வாழ்நாளில் இடும். இவற்றை ரூ.8000 முதல் 10,000 வரை விற்கலாம். பின்னர் விற்கப்படும் கோழிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.3500 முதல் 5 ஆயிரம் வரை லாபம் பெறலாம்’’ என்றார். விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தச்சை கணேசராஜா, கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன் (எ) ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை தென்காசி உதவி இயக்குநர் முருகையா , நெல்லை மண்டல இணை இயக்குநர் தியோபிலஸ், ரோஜர், வடக்குப்புதூர் கால்நடை உதவி மருத்துவர் வசந்தா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Chief Minister ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...