×

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்காக பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம்

தஞ்சை, டிச. 3: தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்காக பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடந்தது. தஞ்சை பெரிய கோயிலில் 1997ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 23 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.ஆனால் இன்னும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதையடுத்து கடந்த 29ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பாலாய பூஜை தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30ம் தேதி மூலமந்திர ஹோமம், ருத்ராபிஷேகம், மருத்சங்கரஹணம், ரஷ்கபந்தன் ஆகியவற்றுடன் முதல்கால யாகசாலை நடந்தது. இதையடுத்து அனைத்து மூலவர் சன்னதிகளும் திரையிட்டு மறைக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 1ம் தேதி காலை 2ம் கால யாகசாலையும், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று நான்காம் யாகசாலை பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் பங்கேற்று வேதமந்திரங்கள் வாசிக்க, வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடந்தது. இதில் பெருவுடையார் சன்னதியில் செப்பு திருமேனியிலான பெருவுடையார், பெரியநாயகி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மற்ற மூலவர்களுக்கு பதிலாக ஆவாஹனம் செய்யப்பட்ட படத்துக்கு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில் பெரிய கோயில் கும்பாபிஷேகம் முடியும் வரை பிரதோஷம், மகரசங்கராந்தி போன்ற விழாக்கள் நடைபெறாது என அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பாலாலயம் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான 8 கால யாகசாலை பூஜைகள் மேற்கொள்ள கோயில் வளாகத்தில் பந்தகால் முகூர்த்தம் நடந்தது.

Tags : Tanjay ,deities ,Palestinian ,
× RELATED 118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்