×

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீர் ரத்து பொதுமக்கள் ஏமாற்றம்

நாகர்கோவில், டிச.3: நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகள் தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிப்பது வழக்கம். ஆனால் தேர்தல் அறிவிக்கப்படும்போது பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், அம்மா திட்ட முகாம், மனுநீதிநாள் முகாம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும். தேர்தலுக்கு பின்னர் இவை மீண்டும் செயல்படுத்தப்படும். இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வழக்கம்போல காலை முதலே ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். அதிகாரிகளும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் திடீரென காலை 10 மணியளவில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து, நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை நிறுத்தினர். கூட்ட அரங்கில் இருந்து அலுவலர்கள் வெளியே சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கொண்டுவந்த மனுக்களை பெட்டியில் போடுவதற்கு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என கருதி வந்த பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : cancellation ,meeting ,district collector ,office ,Kumari ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு