×

பெரும்புதூர், மதுராந்தகம் பகுதியில் ஏரிகள் உடைந்தன

பெரும்புதூர், டிச. 3: பெரும்புதூர் அருகே கூட்டவாக்கம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அடுத்த மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டவாக்கத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீர் மூலம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த ஏரியின் கலங்கல் மற்றும் கரைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது.பெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் கூட்டவாக்கத்தில் உள்ள பெரிய ஏரி முழுவதும் நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கூட்டவாக்கம் ஏரியின் ஒரு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள் சென்று, மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை அடைக்க முயன்றனர். இருப்பினும் அடைக்க முடியாததாதல் ஏரியில் இருந்து நீர் வேகமாக வெளியேறியது. இதனால் பொதுப்பணி துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

அங்கு ஊழியர்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் ஏரியின் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சியில் சித்தாத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள விவசாய பாசன ஏரி, தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வந்தது. இந்நிலையில், ஏரியின் ஒருபக்க கரை பலமற்ற நிலையில் இருந்ததன் காரணத்தினால் உடைந்தது. அந்த உடைப்பின் வழியாக ஏரியில் தேங்கியிருந்த நீர் மளமளவென வெளியேறத் தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை கொண்டு ஏரியின் உடைப்பை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை அறிந்த மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி நேரில் சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியினை பார்வையிட்டார். அப்போது, அவர், பொதுமக்களுடன் இணைந்து உடைப்பின் வழியாக  தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவருடன் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தம்பு, மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வேதாச்சலம், அசோகன், வேடந்தாங்கல் ஊராட்சி செயலர் வேணு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து எம்எல்ஏ புகழேந்தி ஏரியின் உடைப்பை நிரந்தரமாக சரிசெய்து மீண்டும் இதுபோன்று நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Tags : Lakes ,area ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...