×

கல்லிடைக்குறிச்சி அருகே திறக்கப்படாத பொட்டல்-உலுப்படிபாறை பாலத்தில் தற்காலிக இணைப்பு சாலை அமைப்பு

அம்பை, டிச.1: கல்லிைடக்குறிச்சி அருகே திறக்கப்படாத பொட்டல்-உலுப்படிபாறை பாலத்திற்கு தற்காலிகமாக இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்தது. கல்லிடைக்குறிச்சி அருகே புலிகள் காப்பகம் பகுதியில் பொட்டல் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.  விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியையொட்டி எலுமிச்சையாறு உள்ளது. இப்பகுதியினர் ஆற்றை கடக்க தரைமட்டப்பாலம் இருந்தது.

மழை காலங்களில் மேற்கு தொடர்ச்சிமலை, புலிகள் காப்பகம் வனப்பகுதியிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம் எலுமிச்சையாறு வழியாக  பெருக்கெடுத்து ஓடும். அப்போது இப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து எலுமிச்சையாற்றில் பாலம் கட்டித்தர பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் எலுமிச்சையாற்றின் குறுக்கே ரூ.1.35 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடந்த பணி தற்போது முடிவடைந்த நிலையில் பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால்  சேதமடைந்தது. இதனால் பொட்டல் கிராமத்திற்கு போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் விவசாய பணிகளுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை.

அனைத்து தரப்பினரின் நலன்கருதி பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரிடம் கேட்டபோது, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைத்து இன்று முதல் தற்காலிகமாக போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து நேற்று மாலை ஜேசிபி உதவியுடன் இணைப்பு சாலை அமைக்க துரித நடவடிக்கை மேற்கொண்ட உதவி பொறியாளர்  (கிராமபுற சாலை)ராஜாத்தியையும் பிற பணியாளர்களையும் கிராமமக்கள்  பாராட்டினர். விரைவில் நிரந்தர பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kalidaikurichi ,bridge ,
× RELATED திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை