×

களக்காடு பகுதியில் விடிய, விடிய கனமழை ஊருக்குள் வெள்ளம் புகுந்தது: பாலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு

களக்காடு, டிச. 1: களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையிலும் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

இதையடுத்து நேற்று காலை முதல் களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்குநேரியான் கால்வாயில் கரைகளை தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. களக்காடு- சிதம்பராபுரம் செல்லும் சாலையில் நாங்குநேரியான் கால்வாயில் உள்ள தரைபாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் களக்காடு- சிதம்பரபுரம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. மூங்கிலடி ஆற்றிலும் கடும் வெள்ளம் கரைபுரண்டது. ஆற்றின் கரைகளை தாண்டி வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அங்குள்ள வெப்பல் தெருவில் புகுந்த வெள்ளம், தொடக்கப்பள்ளி மற்றும் வீடுகளை சூழ்ந்தது. களக்காடு- தலையணை செல்லும் சாலையில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் சிவபுரம், வனத்துறை அலுவலகங்கள், ஊழியர்கள் குடியிருப்பு, தலையணை பகுதிகள் துண்டிக்கப்பட்டன. மூங்கிலடி பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே வெள்ளம் ஊருக்குள் புகுந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே பழைய பாலத்தை அகற்றி விட்டு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளம், களக்காடு அரசு மருத்துவமனை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது. அங்குள்ள ஊழியர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நாங்குநேரியான் கால்வாயை ஒட்டியுள்ள விளைநிலங்களிலும் வெள்ளம் புகுந்ததால் வாழை, நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. களக்காடு மலையில் உள்ள அருவி, நீரோடைகளிலும் கடும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. தலையணையில் காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரள்கிறது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து சென்றது. மதியத்திற்கு பின் வெள்ளம் வடிய தொடங்கியது. களக்காடு பேரூராட்சி ஊழியர்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நீரை வெளியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம், கீழப்பாவூர், திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, ஆவுடையானூர், சாலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. மதியம் 2 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

 சுரண்டை: சுரண்டை பகுதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகிறது. கடந்தவாரம் பெய்த மழையால் இரட்டைகுளம் நிரம்பியதால் செண்பககால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்ததால் மண்அரிப்பு ஏற்பட்டு கால்வாய் சுவர் இடிந்து விழுந்தது. சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை வழியாக தென்காசி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலை என்பதால் ஆபத்து நிகழும் முன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செண்பக கால்வாயில் மூன்று அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அல்லது தடுப்புவேலி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   வி.கே.புரம்: வி.கே.புரம் கோட்டைவிளைபட்டியில் கங்கைஆழ்வார்குளம் உள்ளது. இக்குளத்திற்கு கடனாநதி மூலம் தண்ணீர் வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் இக்குளம் நிரம்பியது. இக்குளத்தின் ஒரு கரைப்பகுதியில் மண்சரிவால் சிறிதளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த கரைப்பகுதியின் மண்சரிவு எந்த நேரத்திலும் பெரிதாகி உடையும் அபாய நிலையில் உள்ளது. இந்த குளம் உடைந்தால் தண்ணீர் முழுவதும் பக்கத்தில் பயிரிடப்பட்டுள்ள வயல்களுக்குச் சென்று சேதத்தை விளைவிக்கும். ஊர் மக்கள் திரண்டு சென்று குளத்தை பார்வையிட்டு வருகின்றனர். பாபநாசம் அணையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றில் கரையில் உள்ள முத்துமாலையம்மன் கோயில் பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் தைப்பூச மண்டப படித்துறையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. அங்குள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

கடையம் -தென்காசி சாலையில் 3 வீடுகள் இடிந்தன கனமழைக்கு எல்லைபுளியில் புளியமரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழக்கடையம்ஊராட்சி குமரேசபுரம் காலனியில் உள்ள வீடுகளிலும் பொட்டல்புதூர் முத்தன்தெருவில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. கேளையாபிள்ளையூரில் சிவகாமி என்பவரது வீட்டின் சமையலறை இடிந்து விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள பரும்புகிராமத்தில் ஈஸ்வரி என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பொட்டல்புதூர் மெயின் ரோட்டு பள்ளத்தில் தம்பதி விழுந்து காயமடைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விகேபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் இரண்டாவது தெருவில் லெட்சுமியம்மாள்(70) என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை.

Tags : area ,drowning ,Kalakkad ,bridges ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி