×

திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குவதில் முறைகேடு

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் முறைகேடு நடைபெறுகிறது என பயணிகள் புகார் அளித்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(43) என்பவர், நேற்று திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்த டிக்கெட் கவுண்டரில், மயிலாடுதுறை - திருநெல்வேலி பாஸ்ட் பாசஞ்ர் ரயிலில் மதுரைக்கு செல்ல டிக்கெட் கேட்டார், அதற்கு டிக்கெட் கவுண்டரில் இருந்தவர் மதுரைக்கு டிக்கெட் இல்லை, வேண்டுமானால் திருச்சிக்கு இல்லையென்றால் திருநெல்வேலிக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். திருச்சியில் ஏறி இறங்க முடியாது, எனவே திருநெல்வேலிக்கு டிக்கெட் கொடுங்கள் என கூறி வாங்கியுள்ளார். டிக்கெட்டை பார்த்தும் அதில் திருவிடைமருதூர் - திருநெல்வேலி எனவும், கடந்த 6.11.2019 அன்று பிரிண்ட் எடுக்கப்பட்ட டிக்கெட்டில், 30.11.2019 என முத்திரை அச்சிட்டு வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து டிக்கெட் கவுண்டரில் இருந்தவரிடம், ராதாகிருஷ்ணன், விளக்கம் கேட்டதற்கு முறையான பதிலை கூறாமல் அவர் திட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் தெற்கு ரயில் நிர்வாகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் செய்தார்.அதில், பயணிகளுக்கு செல்ல வேண்டிய இடத்துக்கான டிக்கெட்டை தராமல், கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற டிக்கெட்டை விநியோகம் செய்யும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என புகார் செய்துள்ளார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கெட் கேட்டால், அதை தர மறுத்து அவர்கள் நீண்ட தொலைவு செல்லும் ஊருக்கு டிக்கெட்டை வழங்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு கூடுதல் செலவும், கவுண்டரில் தேவையில்லாத தகராறும் ஏற்படுகிறது. என்னைப் போன்று பலருக்கும் நேற்று டிக்கெட் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை தனியார் முகவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு கணினி மூலம் டிக்கெட் வழங்கும் வசதி கிடையாது. அவர் மொத்தமாக கும்பகோணத்தில் டிக்கெட் வாங்கி வந்து அதனை பயணிகளுக்கு தினமும் விற்பனை செய்து வருகிறார். மதுரைக்கு செல்ல வேண்டிய டிக்கெட் விற்பனையாகிருக்கும், எனவே தான் திருநெல்வேலி டிக்கெட்டை வழங்கியிருக்கிறார். இந்த டிக்கெட்டில் தேதி முத்திரை இருந்தால் அவை செல்லக்கூடியவை தான். டிக்கெட் இருப்பு நிலவரம் குறித்து வணிக ஆய்வாளர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்றனர்.

Tags : railway station ,Thiruvaiyamarudur ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...