×

திருமூர்த்திமலையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கம்

உடுமலை,டிச.1: திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள உலக சமாதான ஆலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஆயிஷா மருத்துவ குழும, சி.இ.ஓ., டாக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆயுஷா ஒருங்கிணைந்த மருத்துவ குழுமம் மற்றும் ஆயுஷ்பதி அசோசியேஷன் இணைந்து நீரிழிவு குறைபாட்டை முழுமையாக நீக்குவதற்கான சிகிச்சை முறை குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக டிசம்பர் 1ம் தேதி(இன்று) உலக சமாதான ஆலயத்தில் சர்வதேச கருத்தரங்கத்தை நடத்த உள்ளோம். இக்கருத்தரங்கத்தில் அலோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு அவரவர் செய்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பதோடு, பேசவும் உள்ளனர். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது குறித்தும் வருங்கால சந்ததியினரை நீரிழிவு தாக்காத வண்ணம் காக்கின்ற வகையில் அனைத்து தரப்பு மருத்துவமுறைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். இக்கருத்தரங்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கத்தில் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் மகேந்திரன், டாக்டர் நாகராஜ், டாக்டர் சிவக்குமார், டாக்டர் சுனித் மேத்யூ, டாக்டர் அசோகன், டாக்டர் ஹக்கீம் சையத் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கவுரையாற்ற உள்ளனர். இவ்வாறு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது ஆயுஷ்பதி அசோசியேஷன் தலைவர் டாக்டர் அலெக்சாண்டர் ஜேசுதாஸ், துணை தலைவர் டாக்டர் செந்தில்குமார், செயலாளர் டாக்டர் சிவசங்கர், உலக சமாதான ஆலய அறக்கட்டளை பொது செயலாளர் சுந்தரராமன், சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம், செங்குட்டுவன், சுப்பிரமணியன், ஆர்.வி.செந்தில், வினோத், யுவராஜூலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : International Medical Conference on Diabetes Control ,
× RELATED 1200 கிராம் பறிமுதல்; கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது