சி.பி.சி.ஐ.டி. எனக்கூறி பணம் பறிப்பு தலைமறைவான 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

திருப்பூர்,டிச.1: திருப்பூரில், கடந்த 25ம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் எனக்கூறி பணம் பறித்த 3 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடா ராம் சவுத்ரி (36). இவர் திருப்பூர் 15. வேலம்பாளையத்தை அடுத்த ஓடக்காடு பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி இவருடைய கடைக்கு சென்ற 6 பேர் கொண்ட கும்பல் தங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்று அறிமுகப்படுத்தியதுடன், கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதால் பயந்து போன ரூடா ராம் சவுத்ரி அந்த கும்பலிடம் மூன்றரை லட்ச ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார். பின்னர், அவர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் வைத்து அந்த கும்பலிடம் ரூ.3 லட்சம் கொடுத்து விட்டு, மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை மறுநாள் தருவதாக கூறியதாக தெரிகிறது.

இதனால் ரூ.3 லட்சத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த கும்பல் மீதி தொகை ரூ.50 ஆயிரத்தை கேட்டு ரூடா ராம் சவுத்ரியை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர்.  இதனால் சந்தேகமடைந்த அவர் இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் கணபதிநகரை சேர்ந்த சையது இப்ராகிம் (44), காங்கேயம் ரோட்டை சேர்ந்த முகமது ஹனீபா (44), சாதிக் அலி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அந்த கும்பலில் தலைமறைவாக உள்ள பாபு, ரஹமதுல்லா, அஸ்ரப் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் தலைமையில் மற்றொரு தனிப்படையும் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories:

>