×

கோவை கவுண்டம்பாளையத்தில் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

கோவை, டிச.1:  பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் 16.3 ஏக்கர் நிலத்தை அறிஞர் அண்ணா நகர் சுற்றுப்புற திட்டத்திற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1987ல் ஆர்ஜிதம் செய்தது. இந்த திட்டத்திற்காக நகர்புற மேம்பாட்டு துறையிடம் ஒப்புதலை பெறுவதற்கு முன்பே இந்த நிலம் பலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
மொத்தமுள்ள 16.13 ஏக்கர் நிலத்தில் 0.9 ஏக்கர் நிலம் கோயில் மற்றும் பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் போக மீதம் 0.50 ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. இந்த நிலத்தில் பள்ளி அமைக்கப்பட வேண்டும்.  இதற்கிடையே, இந்த 0.5 ஏக்கர் நிலத்தை அப்போதிருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற் பொறியாளர் 6 பிளாட்டாக பிரித்து ரூ.71 லட்சத்து 44,900க்கு 3ம் நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டார்.

இதற்கான முன் அனுமதி எதையும் அவர் பெறவில்லை. அவர் விற்பனை ஒப்பந்தம் செய்தது அரசு பதிவேட்டில் பதிவும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2016ல் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அந்த விற்பனை ஒப்பந்தத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து நிலத்தை வாங்கியவர்கள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டு மீண்டும் பள்ளி கட்டுவதற்காக வழங்குமாறு உத்தரவிடக்கோரி அண்ணாநகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.ஜெயக்குமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கையையும் சேர்க்க தலைமை நீதிபதியிடம் உரிய உத்தரவை பெறுமாறு உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு உத்தரவிட்டனர்.

Tags : land ,school ,Madras High Court ,Coimbatore ,
× RELATED நில புரோக்கர் பரிதாப பலி