அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு

கோவை, டிச.1:   கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு 197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் நடப்பாண்டில்  சுமார் 91,457 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 4800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 27 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த 18 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government hospital ,
× RELATED விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிப்பு