×

வேலையில்லா திண்டாட்டம்தான் நாட்டு மக்களுக்கு மோடி தந்த பரிசு

கோவை,டிச.1: நாட்டு மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தைதான் மோடி தலைமையிலான மத்திய அரசு பரிசாக வழங்கியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-பாரதிய ஜனதா அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் இருந்த நிலையை விட பலமடங்கு கீழே சென்றுவிட்டது இன்றைக்கு இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் ஏறக்குறைய 4.5 சதவீத உள்நாட்டு உற்பத்தி குறைந்து இருப்பதாக செய்திகள் வந்து இருக்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல ஆறு ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா இந்த நாட்டை எவ்வாறு சீரழித்து உள்ளார்கள் என்பது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நன்றாக தெரிகிறது. இந்தியாவை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்த அரசாங்கமாக காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. ஆனால் இன்று இந்தியாவில் வறுமையை அதிகரிக்கும் அரசாங்கமாக பாரதிய ஜனதா அரசாங்கம் உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை உலகத்திலுள்ள அனைத்து பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் சொல்கின்றன. எனவே மோடி இந்த தேசத்திற்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகளை நாட்டு மக்களுக்கு பரிசாக தந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ராசா பேசியபோது, கோட்சேவை பயங்கரவாதி என்று குறிப்பிட்டார். உடனே பாரதிய ஜனதா உறுப்பினர் கோட்சே தேச பக்தர் என்று கூறியுள்ளார். இதுவும் அவர்களுடைய முகமூடியை காட்டுகின்ற விதத்தில் உள்ளது. கோட்சே இந்த தேசத்தின் தேசபக்தர் என்று சொன்னால், மகாத்மா காந்தி யார்? பாரதிய ஜனதா ஒருபுறம் உறுப்பினர்களை கண்டிப்பதுபோல நடிக்கிறார்கள், இன்னொருபுறம் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.

பாரதிய ஜனதா இந்த தேசத்திற்கு ஒற்றுமைக்கு கேடான அரசியல் கட்சி. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு கேடான அரசியல் கட்சி. இதை இந்தியாவில் உள்ள இளைஞர்களும் இந்தியாவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களும் உணர்ந்து பார்க்க வேண்டும். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் வளர்ச்சி வேண்டும். அந்த வார்த்தையை மோடியால் கொடுக்க முடியவில்லை. அதிகமான முதலீடுகள் வந்தால்தான் தொழில்கள் பெருகும். தொழில்கள் பெருகினால் வேலைவாய்ப்பு பெருகும். வேலை வாய்ப்பு வந்தால் ஊதியம் நிறைய கிடைக்கும். சாதாரண மக்களுக்கு ஊதியம் கிடைத்தால்தான் சுழற்சி ஏற்படும். அந்த பண சுழற்சியின் மூலமாகத்தான் தேசத்தின் பொருளாதாரம் வளரும். இந்த எளிய பொருளாதார வழியை தெரியாமல்தான் பண மதிப்பிழப்பு நீக்கம் என்னும் மாபெரும் கொடுமையை செய்த மோடி இந்த தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக வறுமையின் பிடிக்கு கொண்டு செல்கின்றார். எனவே இதை தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : country ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!