×

ஜிஎஸ்டி தொடர்பான கருத்தரங்கு

மதுரை, டிச.1:  சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள், விளைவுகள் குறித்தும், விழிப்புணர்வு கருத்தரங்கு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்ட்டன்ட்ஸ் ஆப் இந்தியாவின் மதுரை கிளை ஆகியவை சார்பில் மதுரையில் நடத்தப்பட்டது. வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். மதுரை மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை இணை ஆணையர் பாண்டிராஜா பேசும்போது, ‘‘ஜிஎஸ்டி.யில் உள்ள சிரமங்கள் அனைத்தும் படிப்படியாக குறைக்கப்பட்டு எளிமைப் படுத்துவதில் அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. சப்கா விஸ்வாஸ் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து அகில இந்திய அளவில் மதுரையில் மட்டும் இதுவரை 1300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இத்திட்டம் குறித்து மதுரையில் தொழில் வணிகர்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. இத்திட்டம் நிறைவடையும் டிசம்பர் 31க்குள்  கார்ப்பரேட் நிறுவனங்கள், அதிகளவில் இத்திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கிறோம். இத்திட்டம் குறித்து விளக்கிடவும், ஆலோசனைகள் அளித்திடவும் எங்கள் அலுவலகத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்து பேசும்பாது, “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு, அதிலுள்ள குழப்பங்கள் இன்னும் குறையவில்லை.  பொதுவாக எந்தவொரு வரிமுறையாக இருந்தாலும் மாறுதல்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் வணிகம் செய்தால் அதன் விளைவுகளை நிச்சயமாக சந்திக்க வேண்டியதிருக்கும்.  அதற்கெல்லாம் இதுபோன்ற கூட்டங்களில்  தொழில் வணிக பெருமக்கள் கலந்து கொண்டு  தெளிவுபெற வேண்டியது அவசியம். என்றார்.

இதில் ரீஜினல் கவுன்சில் மற்றும் சேப்டர்ஸ் கோ-ஆர்டினேசன் கமிட்டி சேர்மன் பத்மநாபன், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், சிஎம்ஏ.வை சேர்ந்த விஸ்வநாத் பட், சுபாஷினி சுப்பிரமணி, நிரஞ்சன் மிஸ்ரா மற்றும் கோபால் கிருஷ்ணராஜு உள்பட பலர் பேசினர். கருத்தரங்கில் பல்வேறு தொழில் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், கணக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Seminar ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்