×

அன்னூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

அன்னூர், நவ. 1: அன்னூர் சுற்றுவட்டார பகுதியிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு என  திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரித்ததன் காரணமாக போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்னூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க மறுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் 4வது கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அன்னூர் அருகே உள்ள குருக்கிலிபாளையம் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தில் குடிநீரை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அன்னூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் 4வது கூட்டு குடிநீர் திட்டத்தில் தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் எதுவும் இல்லாத நிலையில் இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Annur panorachchi ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்