×

நீர்மட்டம் 118 அடியை தொட்டு தண்ணீர் கசிவதால் ஆழியார் அணை உடையும் அபாயம் என வலைத்தளங்களில் புகைப்படம் வைரல்

பொள்ளாச்சி,  டிச.1:  ஆழியார் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக 118 அடியாக உள்ளதால், அணை உடையும் அபாயம் என லைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன  திட்டத்திற்குட்பட்ட (பி.ஏ.பி.) ஆழியார் அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய  ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள்  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும்  ஏழேகால் டி.எம்.சி. தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது.  மேலும்,  ஆழியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, குறிச்சி,  குனியமுத்தூர் நகராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர்  ஆதாரமாக விளங்குகிறது. மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையில்,  சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம்.  இதனால், கோடை காலத்தில் கூட ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர்  திறப்பு தொடர்ந்திருக்கும்.

  ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில்  பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள சோலையார், திருமூர்த்தி, பரம்பிக்குளம் உள்ளிட்ட  அணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை சந்திக்கும்போது, ஆழியார் அணையில்  மட்டும் ஓரளவு தண்ணீர் தேங்கியிருக்கும்.இந்த ஆண்டில் மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதியில் ஆகஸ்ட் மாதம் முதல் பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஆழியார்  அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  முழு ெகாள்ளளவை எட்டியது. தற்போது மழை குறைந்த நிலையில் அணையின்  நீர்மட்டம் 118 அடியையும் தாண்டி கடல்போல் உள்ளது. அணையில் நீர்மட்டம்  நிரம்பியதுபோல் இருப்பதால், அணையின் மேல் பகுதியில் தண்ணீர் கசிந்தவாறு  ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையே சிலர், ஆழியார் அணையில்  தண்ணீர் கசிந்து உடையும் அபாயம் உள்ளதாக சமூக  வலைதளங்களில் புகைப்படத்தை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த  பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து  பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியார் அணையின் நீர்மட்டம்  தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக 118 அடியாக உள்ளது.

அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை தொடும்போது மேல்பகுதியில் தண்ணீர் கசிவது வழக்கமாக உள்ளது. ஆனால் சிலர்,  அணையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு உடையும் அபாயம் இருப்பதாக தவறான தகவல்களை  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ஆழியார் அணை எவ்வித சேதமுமின்றி  முழு பாதுகாப்புடன் உள்ளது. எத்தனை நாட்களும் தண்ணீர் தேக்கி வைத்தாலும்  தாக்கு பிடிக்கும். எனவே ஆழியார் அணை குறித்து தகவறான  தகவல் பரப்புவர்களை கண்காணித்து, அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.  என்றார்.

Tags : Water leaks ,dam ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்