×

தாறுமாறாக கார் ஓட்டிய வாலிபருக்கு அபராதம்

கோவை, டிச.1: கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று முன்தினம் இரவு சிவானந்தா காலனியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக தாறுமாறாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். நிற்காமல் சென்ற காரை துரத்திப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரை ஓட்டிய நபர் தள்ளாடிய நிலையில் இருந்தார். போலீசார் அவரிடம் குடிபோதையில் இருப்பதற்கான சோதனையை செய்ய முயன்றபோது அவர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தார். பொது இடத்தில் போலீசாரிடம் ஒருவர் வாக்குவாதம் செய்வதை பார்த்து பொதுமக்கள் அங்கு திரண்டனர்.பின்னர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை வலுக்கட்டாயமாக பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனை அழைத்து சென்று மருத்துவ சோதனை நடத்தினர். இதில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.பிறகு அவரை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ரத்தினபுரி மருதுகுட்டி நகரைச் சேர்ந்த ஸ்டாலின் பிரபு(32) என்பது தெரிந்தது.இதையடுத்து அவருக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும், அவர் அதிக மது போதையில் இருந்ததால் அவரால் மேற்கொண்டு வாகனம் ஓட்ட முடியவில்லை. இதையடுத்து போலீசார் மூலம் தகவலறிந்த அவரது குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அபராதம் செலுத்தினர். பிறகு ஸ்டாலின் பிரபுவுக்கு போலீசார் அறிவுரை கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்