அரசு பள்ளி தரம் குறைந்ததாக விமர்சனம்-தடுக்க நடவடிக்கை

கோபி, டிச. 1:   அரசு பள்ளியின் தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபி அருகே உள்ள ஏளூரில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் தரம் குறித்து கண்காணிக்கப்படும். அரசு பள்ளி தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் கற்றுத்தரும் முறையை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சமடைய தேவை இல்லை.

1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் 90 நிமிடம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். மேலும் 5 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படும். அதேபோன்று விளையாட்டு, இயல், இசை, நாடகம், பேச்சு, ஓவியப்போட்டி, யோகா, சாலை விதிகளை கற்றுத்தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு எழுத 2.30 மணி நேரம் என்பதை 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

Tags :
× RELATED கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை