×

உரக்கடைகளில் விலை பட்டியல் வைக்க உத்தரவு

ஈரோடு, டிச. 1:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும், உரங்களின் விலை பட்டியலை கட்டாயமாக பார்வைக்கு வைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  வேளாண் இணை இயக்குநர் பிரேமலதா கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பி.ஓ.எஸ். இயந்திரங்களில் பதிவு செய்த பிறகு தான் உரத்தையும், ரசீதையும் வழங்க வேண்டும். பி.ஓ.எஸ். கருவி மூலம் உரம் விற்பனை செய்யாத பட்சத்தில் கடை உரிமம் ரத்து செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு யூரியா உரம் பெறப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் வாயிலாக விநியோகிக்கப்படுகிறது.

 மேலும் விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் அட்டையுடன் சென்ற உரம் வாங்கி பயனடையலாம். உர விற்பனை நிலையங்கள், உரங்களின் விலை பட்டியலை, விவசாயிகள் பார்வையில் படும்படி வைத்து, தினமும் பராமரிக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் ஒரு மூட்டை யூரியாவை அதிகப்பட்சமாக ரூ.266.50க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. மேலும் உரிய உரிமம் இன்றி விற்பனை செய்யக்கூடாது. யூரியா உரத்துடன் மற்ற இடுபொருளும் வாங்க வேண்டும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. யூரியா உள்ளிட்ட உரத்தை, கூடுதல் விலைக்கோ, முறையான உரிமம் இன்றியோ விற்பனை செய்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வேளாண் அலுவலர்கள், உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : lounge ,
× RELATED வானத்தில் இரவு உணவு!: இந்தோனேசியாவில்...