×

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் நடவடிக்கையால் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் பாதிப்பு

மொடக்குறிச்சி, டிச. 1:  ஈரோடு, நாமக்கல் மாவட்ட மரவள்ளி கிழங்கு விவசாயிகள், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நேற்று நடந்தது.  இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சார்பில் கனகராஜ் மற்றும் வியாபாரிகள் சார்பில் அசோகன், ஈரோடு மாவட்ட விவசாயிகள் சார்பில் வடிவேல், சென்னியங்கிரி, வியாபாரிகள் சார்பில் மூர்த்தி, அண்ணாதுரை, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரராசு பேசியதாவது:  ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மரவள்ளி கிழங்கு உள்ளது. டிசம்பர் 2019 முதல் 2020 ஏப்ரல் வரை அறுவடை காலமாகும். தற்போது மாவுசத்து அடிப்படையில் 28 பாய்ண்ட் கிழங்கு ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகி வந்தது.

 இந்நிலையில், சேலம் ஜவ்வரிசி உற்பத்தியாளர் சேகோ சங்கம் ரூ.2000 வரை விலையை குறைந்து ரூ.7,500 முதல் ரூ.8000 வரை இன்று முதல் கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளது. இதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக அறுவடை பருவத்தில் செயற்கையாக விலை குறைப்பதும், அறுவடை காலம் முடிந்ததும் 100 சதவிகிதம் விலையை உயர்த்துவதும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 இது விவசாயிகளை ஏமாற்றும் செயல். சேகோ சங்கம் விலையை குறைப்பதற்காக வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கிறது. இதனால் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்களும், கூலித் தொழிலாளர்களும் பாதிக்கின்றனர். உடனடியாக ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் விவசாயிகள் நலன் கருதி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஈரோடு, நாமக்கல், மாவட்ட விவசாயிகள் மரவள்ளி கிழக்கு அறுவடையை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கூட்டமைப்பின் சார்பாக அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம் எனக் கூறினார்.

Tags : Cassava Tree Farmers ,Action of Juvenile Producers ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...