×

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளியில் தீ

பல்லாவரம்: குன்றத்தூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர். குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் பிரதான சாலையில், தனியாருக்கு சொந்தமான பிரபல பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன்படி இந்த பள்ளியும் நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பள்ளியின் 2வது தளத்தில் உள்ள அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பள்ளியின் காவலாளி உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, நோட்டு, புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அந்த அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Tags : private school ,Kundathoor ,
× RELATED சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்