×

வடசென்னை பகுதிகளில் ஆமை வேகத்தில் மழைநீர் கால்வாய் பணி : பொதுமக்கள் கடும் அவதி

பெரம்பூர்: வட சென்னையில் பல பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து நீண்ட நாள் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதனை சரிவர பராமரிக்காததால், குப்பை குவியலாகவும், தூர்ந்தும் நீரோட்டம் தடைபடும் நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக வடசென்னையில் முறையான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்பேரில், ஆங்காங்கே மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. கோடை காலத்தில் தொடங்கி, விரைந்து முடித்திருக்க வேண்டிய இந்த பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டதுடன், ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பள்ளங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 73வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களால் 2 மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. இதில் அடிப்பகுதியில் மின்வயர்கள் சென்றதால் மின்வாரிய ஊழியர்களின் பணிக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் அதிக அளவில் தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்காக காத்திருந்த அதிகாரிகள், தற்போது வேலையை துவங்கி உள்ளனர். ஆனால், பணிகள் விரைந்து நடைபெறாமல் மீண்டும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் தினமும் வாகனத்தில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். மேலும் அப்பகுதி வீடுகளில் உள்ள மக்கள் கொசு தொல்லையால் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என மாநகராட்சி ஆணையர் அவ்வப்போது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். ஆனால், பல இடங்களில் ஆமை வேகத்தில்தான் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், வடிகால் பணிகள் முடிய பல மாதங்களாகும் அவலம் உள்ளது. எனவே, மாநகராட்சி ஆணையர் வடசென்னை பகுதியில் நேரில் ஆய்வு செய்து ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காற்றில் பறக்கும் உத்தரவு

சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்தால் ₹1  லட்சம் அபராதம் விதிக்கப்படும், என மாநகராட்சி  ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். ஆனால் தற்போது  வடசென்னையில் எந்த பகுதியில் பார்த்தாலும், மழைநீர் கால்வாயில்  கழிவுநீர் விடப்படுகிறது. அதிகாரிகளே பல இடங்களில் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை விடுகின்றனர். இவ்வாறு மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. எனவே, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : disaster ,India ,
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...