×

சுடுகாடு செல்லும் பாதை மறிப்பு போலீஸ் பாதுகாப்புடன் பிரேதத்தை அடக்கம் செய்த கிராமத்தினர்

திருச்சுழி, நவ.29: திருச்சுழி அருகே இறந்தவரின் பிரேதத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வழிவிடாததால், போலீசார் பாதுகாப்புடன் கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.திருச்சுழி அருகே மறவர்பெருங்குடி  கிராமத்தில்  அருந்தியர்  காலனி உள்ளது. இங்கு 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்காலனியில் வசிக்கும் மக்கள் மரணமடைந்தால் பிரேதத்தை புதைப்பதற்கு வெள்ளையாபுரம் அருகே சுடுகாடு உள்ளது.  இச்சுடுகாட்டிற்கு செல்லவேண்டுமானால் ஆழமான ஓடை பகுதியை  கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த  சில வருடங்களாக தனியார் பட்டா நிலத்தின் வழியாக பிரேதங்களை கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர். தற்போது அப்பகுதியில் விவசாய நிலத்தில் பயிரியிட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதிக்க மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலனி தெருவில் ராமசாமி என்பவர் மரணமடைந்தார். வழக்கம்போல் சுடுகாட்டிற்கு பிரேதத்தை கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு  அப்பகுதியினர்   சம்பந்தப்பட்ட நபர்களிடம்  கேட்டதாக கூறப்படுகிறது. தற்போது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளதால் எங்களால் அனுமதிக்க இயலாது என கூறியதாகவும், இதனால் பிரேதம் கொண்டு செல்ல  வழியின்றி அடக்கம் செய்ய தாமதமாவதாகவும் இதனால் இரு சமுதாயத்திற்கிடையே தேவையற்ற வீண் பிரச்சனை உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறி ரெட்டியபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அருப்புக்கோட்டை தாசில்தார் பழனிச்சாமி நேரில் சென்று காலனி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காலனி மக்கள் இறந்தால் பிரேதத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதையின்றி ஒவ்வொரு முறையும் காவல்துறை உதவியுடன் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய  நிலையுள்ளது. எனவே எங்களுக்கு சுடுகாட்டிற்கு மாற்று இடம் வேண்டுமென கூறினர். தற்போது உடனடியாக செயல்படுத்த முடியாததால்  ஏற்கனவே உள்ள சுடுகாட்டிற்கு செல்ல கூடிய சர்வே பாதையை சுத்தப்படுத்திய பின்பு பிரேதத்தை அடக்கம் செய்தனர். அதுவரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Tags : police protection ,road ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 39 வாக்கு...