×

சேத்தூரை அடுத்த காமராஜ் நகரில் கழிவுநீர் தேங்கியதால் குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் உடனடியாக சீரமைக்க கோரிக்கை

ராஜபாளையம், நவ. 29: ராஜபாளையம் அருகே முகவூர் காமராஜ் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால், விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்து, முத்துசாமிபுரம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகரில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு எதிர்புறம் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு போதுமான வாறுகால் வசதி இல்லாததால், கழிவு நீர் செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதர சீர்கேடு ஏற்படுவதால் கழிவு நீரை வெளியேற்றக்கோரி பலமுறை இப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியை சேர்ந்த ஊமைதுரை கூறும்போது, சாலையில் தேங்கி உள்ள கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்ததால் தற்போது சாலையில் பல இடங்களில் சுமார் 2 அடி முதல் 3 அடி ஆழத்தில் பள்ளங்கள் உருவாகி உள்ளது. இதில் மழைநீர் குளம் போல தேங்கி உள்ளதால்  டூவீலர்களில் செல்வோர், ஆழம் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி செல்லும் போது, பள்ளங்களில் உள்ள கழிவுநீர் வெளியேறி அருகே உள்ள பள்ளிக்குள் செல்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் மாணவ, மாணவிகள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி செய்து தருவதுடன், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் ஆனந்தகுமாரிடம் கேட்டபோது, ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் கீழ் பகுதியில் குழாய் அமைத்து கழிவுநீரை அகற்றவும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இப்பகுதி முழுவதும் வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags : Kamaraj ,city ,Sethur ,
× RELATED விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நுண்கலை போட்டி பரிசளிப்பு