×

கொடைக்கானலில் யானை தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ வலியுறுத்தல்

திண்டுக்கல், நவ. 29: கொடைக்கானலில் யானை தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். கொடைக்கானல் கீழ்மலை கிராமம், பெரியூர் ஊராட்சி, மன்றத்து கால்வாய் கிராமத்தில் காபி தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு வேலை பார்த்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (37), சரஸ்வதி (40) ஆகியோரை காட்டுயானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி உயிரிழந்தார். சரஸ்வதி ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் உயிரிழந்த ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் கடந்த 15 நாட்களில் யானை தாக்கி 2 சம்பவங்களில் 2 பெண்கள் உயிரிழந்து உள்ளனர் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர் யானையை விரட்ட பலமுறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் மாவட்ட
நிர்வாகமும், தமிழக அரசும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இறந்து பெண்ணின் குடும்பத்தினர் அரசு வழங்கும் இழப்பீடு தொகை தங்களுக்கு வேண்டாம் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். எனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களின் உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும். கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் முன்பு ஒரு காலத்தில் யானை என்பதே இல்லாது இருந்த நிலையில் தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது.

எனவே வனப்பகுதிகளில் இருந்து வரும் யானைகளை விளைநிலங்களுக்கு வராமல் தடுத்து நிறுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 பெண்கள் இறப்பிற்கு காரணமான அந்த ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கவேண்டும். இதற்கு முழுமையான தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றார்.

Tags : Employer ,elephant attackers ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...