×

யூரியா வேண்டும் என்றால் பொட்டாஷ் வாங்க வேண்டும் விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் தனியார் உரக்கடை வியாபாரிகள்

கும்பகோணம், நவ. 29: திருவிடைமருதூர் ஒன்றியத்தில் யூரியா வேண்டுமானால் பொட்டாஷ் வாங்க வேண்டுமென விவசாயிகளை தனியார் உரக்கடை வியாபாரிகள் நிர்ப்பந்தம் செய்து வருகினற்னர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி 2 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மின்மோட்டார் மற்றும் ஆறு, வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். சம்பா மற்றும் தாளடி நடவுப்பணி 50 சதவீதம் முடிந்த நிலையில் பயிர்கள் அனைத்தும் சூல் பருவம் எனும் பால் பருவத்துக்கு வரும் நிலையில் உள்ளது.கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் நடவுப்பணி நடந்துள்ளது. இந்நிலையில் சம்பா நடவு செய்து வரும் நிலையில் பனி மற்றும் மழை, வெயிலால் சம்பா நாற்றுகள் வீணாகி விடும். இதையடுத்து நைட்ரஜன் சத்துக்கள் கிடைத்தால் நாற்றுக்கு பச்சையாக இருக்கும், அதனால் நாற்றுக்கள் நன்றாக வளரவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நாற்றுக்களுக்கு யூரியா கண்டிப்பாக தெளிப்பர். இதனால் நாற்றுக்கள் செழிப்பாக இருக்கும்.

நாற்றுக்களில் பால் பருவம் எனும் சூழ் பருவம் வரும்போது நெல் மணிகள் நெத்தாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பொட்டாஷ் உரத்தை தெளிப்பர். நாற்றுகள் நடவு செய்து சில நாட்களான நிலையில் தற்போது யூரியா உரம் தெளிக்க வேண்டும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் திருவிடைமருதுார் ஒன்றியம் ஏனநல்லுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள தனியார் உரக்கடைகாரர்களிடம் கேட்டனர்.அதற்கு உரக்கடை காரர்கள், விவசாயிகளிடம் பொட்டாஷ் உரம் வாங்கினால் தான் யூரியா உரம் வழங்கப்படும். இல்லையென்றால் யூரியா வழங்கப்படாது என்று கூறுகின்றனர். வட்டிக்கு பணத்தை கடன் வாங்கி சாகுபடி செய்யும் விவசாயிகள் ரூ.300 மதிப்புள்ள யூரியா மூட்டைகளை வாங்குவதற்கு ரூ.900 மதிப்புள்ள பொட்டாஷ் வாங்க வேண்டுமென தனியார் உரக்கடை காரர்கள் நிர்ப்பந்தம் செய்வது விவசாயிகளை வேதனைப்படுத்துவதாகும். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி 10 கிலோ மீட்டர் தூரமுள்ள கும்பகோணத்துக்கு வந்து யூரியா மூட்டைகளை வாங்கி செல்கின்றனர்.எனவே திருவிடைமருதுார் ஒன்றியம் ஏனநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டைகள், கணக்கில் வராத வகையில் இருப்பு உள்ளதா, பொட்டாஷ் வாங்கினால் தான் யூரியா என்று கூறும் நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : rye merchants ,
× RELATED பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்