×

விண்ணப்பிக்க அழைப்பு திருமயம் அருகே பள்ளி மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருமயம், நவ.29: திருமயம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேங்கும் நீரை அகற்றும் பணியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆண்கள் அரசு பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது அப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பள்ளிகளில் ஒன்று.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் விளையாட ஒதுக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் சிறியளவு மழைக்கு கூட மழைநீர் மைதானத்தில் தேங்கிக் கிடப்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கனமழை பெய்யும் போது மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பள்ளி மைதானத்தில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு பள்ளி மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவிவந்தது. இதனை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளிவந்தது.

அதையடுத்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் பள்ளி மைதானத்தில் தேங்கும் மழைநீரைஅகற்ற மைதானம் சுற்றுசசுவர், திருமயம்-காரைக்குடி நெடுஞ்சாலையின் குறுக்கே உடைத்து சிறிய அளவிலான சிமெண்ட் குழாய் பதித்தனர். இருந்த போதிலும் மழை முழுமையாக வடியவில்லை. இதனால் அதிகாரிகள் பெரிய அளவிலான குழாய் பதித்து மழைநீரை வெளியேற்ற முடிவு செய்து தேவையான பொருட்களை அப்பகுதியில் இறக்கி வைத்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் பணிகள் ஏதும் நடைபெறுவதாக தெரியவில்லை. இதனால் பள்ளி மைதான சுற்றுசுவர் பாதுகாப்பின்றி இருப்பதால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கக்கூடும். மேலும் திருமயம் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் பள்ளி மைதானத்தில் மழைநீர்தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பணியை மீண்டும் உடனே தொடங்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,school grounds ,Thirumayam ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...