×

சாலை, மழைநீர் கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர், நவ.29: உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, காமராஜர் தெரு, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. குடியிருப்புகளுக்கு இடையே கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் பெரும் அவதியடைகின்றனர். இந்த பகுதிகளில் கால்வாய் இல்லாததால், மழை நேரங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதிக்கு அருகே தலித் மக்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டு சுமார்  35 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால், இதுவரை யாருக்கும் இடத்தை முறையாக பிரித்து  கொடுக்காமல், அரசு ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.   இதுபற்றி பல்வேறு அதிகாரிகளிடம், பலமுறை பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை உத்திரமேரூர் - அச்சரப்பாக்கம் சாலையில் திரண்டனர். அப்போது அவ்வழியாக சென்னை செல்லும் (தஎ77 பி) அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து வந்த உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமசரம் பேசினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : road ,canal ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...