×

ஊத்துக்கோட்டை-கண்ணன்கோட்டை சாலையில் ராட்சத பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு

ஊத்துக்கோட்டை, நவ. 29: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய இரு  கிராமங்களை இணைத்து ₹330 கோடி செலவில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளும் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல ₹80 கோடி செலவில் கண்ணன்கோட்டையில் இருந்து ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் கிருஷ்ணா கால்வாய் வரை புதிய பைப் லைன் கடந்த 2016ல்  அமைக்கப்பட்டது.  மேலும் இந்த பைப்பில்  அடைப்பு ஏற்படாமல் இருக்க அதே வருடம் செப்டம்பர் மாதம்  17 இடங்களில் சிறு சிறு தொட்டிகள் அமைக்கும் பணிகள்  நடைபெற்றது. இந்த தொட்டிகள் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராம பகுதியில் சாலையின் நடுவிலேயே கட்டப்பட்டு சிமென்ட் சிலாப்புகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கும் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் இந்த தொட்டிகள் மீது ஏறிச்செல்கின்றன. இதனால் இந்த தொட்டியின் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.

இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர்.  இதையறிந்த காவல் துறையினர் பள்ளத்தில் யாரும் விழாமல் இருக்க தடுப்புகள் அமைத்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்து போன தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஊத்துக்கோட்டையில் இருந்து கண்ணன்கோட்டைக்கு உபரிநீர் வெளியேற அமைக்கப்பட்ட மேனுவல் தொட்டிகளின் சிமென்ட் சிலாப்புகள்  தாராட்சி பகுதியில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில்  உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.  இதனால் இரவு நேரத்தில் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  உடனடியாக  சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,Uthukkottai-Kannankottai ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...