×

புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

திருப்பத்தூர், நவ,29: உள்ளாட்சித் தேர்தல்விரைவில் நடத்தப்படும். புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழகத்தின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா திருப்பத்தூர் தனியார் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அரசு தலைமைச்செயலாளர் சண்முகம் வரவேற்றார், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்கவுரை ஆற்றினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் முன்னிலை வகித்து பேசினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து 7,977 பயனாளிகளுக்கு ₹94 கோடியே 37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டம் மூன்றாக ஆக பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் வசதிக்காக திருப்பத்தூர் பிரதான சாலையில் 20 ஏக்கர் இடத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் விரைவில் கொண்டு வரப்படும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தரும். புதிய மாவட்டம் தொடங்கியுள்ளதால் இங்கு வேளாண்மை, தொழில், கல்வி, தோல் தொழில் உள்ளிட்ட பிற தொழில்கள் வளர்ச்சி பெறும். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.அதேபோல, கடந்த 8 ஆண்டுகளில் 6வது முறையாக மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் சாதனைப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 2011-12ம் ஆண்டு முதல் 2017-18ம் ஆண்டு வரை அரசு வேளாண்மை துறையில் 5 முறை கிருஷிகர்மாள் விருசு பெற்று சாதனைப்படைத்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் உரிமையை நிலைநாட்ட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகா அரசு அணைக்கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த 2019ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தமிழக அரசு தொடர்ந்த அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி வரஉள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தென்பெண்ணை ஆற்று பிரச்னையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது சட்ட வல்லுனநர்களுடன் கலந்து தமிழக விவசாயிகளின் உரிமைகள் நிலை நாட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில், இருனாம்பட்டு கிராமத்தில் ₹1 கோடியே 96 லட்சம் செலவில் தடுப்பணை, ஆம்பூர் அடுத்த வெங்கிலி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ₹3.83 கோடி செலவில் தரைமட்ட தடுப்புச்சுவர், வண்ணான்துறை கிராமம் அருகே கானாற்றின் குறுக்கே ₹2 கோடியே 50 லட்சம் மதிப்பில் தடுப்பணை, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் மருத்துவ வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு யூனிட்) ₹7 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்படும்.மேலும், வாணியம்பாடியில் தோல் தொழில் மேம்பட புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம், திருப்பத்தூர், ஏலகிரிமலையில் புதிய உள் விளையாட்டு அரங்கம், ஏலகிரி மலையில் ₹50 லட்சம் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகிறது. 2018ம் ஆண்டு ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்.

Tags : districts ,separation ,elections ,government ,
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை