×

தண்ணீர் பந்தல் கிராமத்தில் பூங்காவில் நீர்தேக்க தொட்டிக்கு தோண்டப்பட்ட ஆபத்தான குட்டை

கொள்ளிடம்,நவ.29: கொள்ளிடம் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபத்தான குட்டையை மூட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்ணீர்பந்தல் கிராமம் விஜயநகரில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரின் மைய பகுதியாக உள்ள இடத்தில் சிறுவர் பூங்காவுக்காக விதிமுறைப்படி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தினந்தோறும் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில், கொள்ளிடம் கூட்டுகுடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் எடுத்துவரப்படும் தண்ணீரை தேக்கி வைத்து வெளிகிராமங்களுக்கு எடுத்து செல்லும் வகையில், நிலத்தடி நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்காக அதிகாரிகள் சார்பில் சிறுவர் பூங்கா இருந்த இடத்தில் உள்ள விளையாட்டு கருவிகள் அகற்றப்பட்டு அதே இடத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு 10 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்தில் நிலத்தடி நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவது நிறுத்தப்பட்டது. அதே இடத்தில் தோண்டப்பட்ட பள்ளம் குட்டைப்போல் உள்ளது. எப்போதும் 10 அடி அழத்திற்கு இதில் தண்ணீர் இருந்து கொண்டேயிருப்பதால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனையே இருந்து வருகின்றனர். மேலும் இந்த குட்டையில் தொடர்ந்து தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் அதிகம் வளர வாய்ப்புள்ளது. இக்குடையில் உள்ள நீரிலிருந்து வீசும் துர்நாற்றம் சுற்றுப்புறச் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூங்கா உள்ள இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி பழையபடி பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : village park ,
× RELATED 104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில்...