×

விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளபோது மனைவியை தாக்கி மகனை அழைத்து சென்ற கணவன் குளச்சல் அருகே பரபரப்பு

நாகர்கோவில், நவ.29: மனைவியுடன் விவாகரத்து வழக்கு நடந்து வரும் வேளையில் வீடு புகுந்து மனைவி மற்றும் அவரது தாயாரை தாக்கி மகனை தன்னுடன் அழைத்து சென்ற கணவர் உள்ளிட்டோர் மீது குளச்சல் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குளச்சல் அருகே மண்டைக்காடு, காரவிளையை சேர்ந்தவர் சிலுவைதாசன் மகள் சிபிதா(25). இவருக்கும், அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த நசரேன் மகன் ராபின் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவரை பிரிந்து சிபிதா தனது தாயார் மேரி குளோரி(60) வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கேயே வசித்தும் வந்துள்ளார். மேலும் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சிபிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பது: ராபின் மற்றும் அழிக்காலை சேர்ந்த ரீகன் உட்பட மூன்று பேர் கடந்த 21ம் தேதி மாலை  மண்டைக்காடு, காரவிளையில் நான் வசிக்கும் வீட்டில் அத்துமீறி நுழைந்தனர். கெட்டவார்த்தை பேசி எனது தாயாரையும், என்னையும் தாக்கி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். எனது மூத்த மகனையும் அழைத்து சென்றனர். எனது பெண்மைக்கு களங்கம் விளைவித்தனர் எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது . மேலும் சிபிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இது தொடர்பாக குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் வழக்குபதிவு செய்து, சப் இன்ஸ்பெக்டர் அன்புராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Kulachalam ,
× RELATED கோழிக்கடை ஊழியரை வழிமறித்து சரமாரி...