×

பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு மானியம்

கோவை, நவ. 29: கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்தில் மானியம் கோரி இந்தாண்டு விண்ணப்பித்துள்ள 4 ஆயிரத்து 999 விண்ணப்பங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இரு சக்கர வாகன மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 2017 ம் நிதியாண்டு முதல் இத்திட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் இந்த ஆண்டு மானியம் பெறுவதற்கு தகுதியான பயனாளிகள் இல்லை எனக் கூறி மீண்டும் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்நிலையில் இருசக்கர வாகனத்துக்கு மானியம் கேட்டு மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில் 4 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  இருசக்கர வாகன மானியம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்க திட்ட அலுவலர் கூறியதாவது: மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானிய திட்டத்தில் ஆண்டுக்கு 4 ஆயிரத்து 449 பயனாளிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2017-18, 2018-19ம் ஆண்டு இலக்கு முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019-20ம் நிதியாண்டில் 90 சதவீத பயனாளிகள்  மானியம் பெற்றுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கும் இம்மாதம் இறுதிக்குள் மானியம் வழங்கப்படும்,’’ என்றார்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது