×

மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க விவசாயத்தில் படிமட்ட முறை கட்டாயம்

ஊட்டி,  நவ.29: நீலகிரி மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் படிமட்ட  முறையில் விவசாயம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. படிமட்ட முறையில்  விவசாயம் செய்யவில்லை என்றால் அரசின் திட்டங்களில் பயன்பெற முடியாது என  கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும்  மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின்  கீழ் கிசான் மேளா எனப்படும் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நேற்று  நடந்தது.  நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் வரவேற்று பேசுகையில், ‘நீலகிரி  மாவட்டத்தை முழுமையான இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றுவது ெதாடர்பான  முயற்சிகளை கலெக்டர் மேற்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஆண்டு கூட்டம் நடத்தி  விவாதிக்கப்பட்டது. பின் அதே ஆண்டில் நீலகிரியை இயற்கை விவசாய மாவட்டமாக  மாற்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீலகிரி  மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், முழுமையான இயற்கை விவசாய மாநிலமான  சிக்கிமிற்கு அழைத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனால் தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர். 50  மண்புழு உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு விவசாயி, ஒரு சென்ட் என்ற  திட்டம், பள்ளிகளில் தோட்டக்கலை கிளப் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும்  நடத்தப்பட்டது. இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றும் முயற்சியின் ஒரு  கட்டமாக வரும் 1ம் தேதி முதல் சிவப்பு முத்திரை கொண்ட ரசாயன உரங்கள்  பயன்படுத்துவதை தவிர்ப்பது எனவும், அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்  மஞ்சள் முத்திரை கொண்ட ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது எனவும்  தீர்மானித்துள்ளனர்’ என்றார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை  வகித்து பேசுகையில் கூறியதாவது:-இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை  விவசாய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் வெளியிடப்படும். 3  ஆண்டுக்குள் முழுமையான இயற்கை விவசாய மாவட்டமாக மாற வேண்டும். இயற்கை  வளங்களை உருவாக்க முடியாது. அதனை பாதுகாக்க மட்டுமே முடியும்.
நீலகிரி  மாவட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சிறுநீரக பாதிப்புகள் மற்றும்  புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு  முக்கிய காரணம் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதே ஆகும். ரசாயன  உரங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் தொடர்ந்து  பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன உரங்கள் தொடர் பயன்பாடு காரணமாக மண்ணின்  தன்மை இழந்து வருகிறது. மேலும், உழவனின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு  அழிந்து வருகின்றன.

தற்போதுதான் இயற்கை விவசாயம் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இயற்கை விவசாயம் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்  என்றால் அதற்கேற்ப கால்நடைகளும் இருக்க வேண்டும். அதற்காக சிறப்பு பகுதி  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 500 நாட்டு மாடுகள் வாங்க  திட்டமிடப்பட்டுள்ளது.  மற்ற மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாறும்  குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு மக்கள்  ஒத்துழைப்பும் உள்ளது. ஆனால் நீலகிரியில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.  அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகள் தூய்மைப்படுத்தப்படும்.  பின், அவற்றை பராமரிக்கும் பொறுப்பு மக்களிடம் விடப்படும். அண்மையில்  பெய்த மழையால் பல இடங்களில் விவசாய நிலங்களில் மேல் அடித்து செல்லப்பட்டு  மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்ள  வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. படிமட்ட முறையில் விவசாயம்  செய்யவில்லை என்றால் அரசின் திட்டங்களில் பயன்பெற முடியாது. இவ்வாறு கலெக்டர் கூறினார். தொடர்ந்து  சிறப்பாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருபவர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டது. மேலும் இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சியும்  நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு பால் இணைய தலைவர் மில்லர்,  தோட்டக்கலை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானி கஸ்தூரி திலகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்