புதிய மருத்துவ கல்லூரிக்கு எச்பிஎப். தொழிற்சாலையின் பழைய கட்டிடங்களையே பயன்படுத்த வேண்டும்

ஊட்டி,  நவ.29: ஊட்டியில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக கட்டிடங்கள்  கட்டாமல், ஏற்கனவே உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையின்  கட்டிடங்களை பயன்படுத்துவதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதி சுமை  குறையும் என ராசா எம்.பி. தெரிவித்துளளார். நீலகிரி மாவட்டத்தில்  60 ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட எச்பிஎப். தொழிற்சாலையை கடந்த மூன்று  ஆண்டுக்கு முன் நலிவடைந்த தொழிற்சாலையாக அறிவித்து மத்திய கனரகத்துறை  அமைச்சகம் இந்த தொழிற்சாலையை மூடியது. இந்த தொழிற்சாலையின் கைவசம் 303  ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதிய  மற்றும் பழைய தொழிற்சாலை, குடியிருப்புகள், மருத்துவமனை என ஏராளமான  கட்டிடங்கள் உள்ளன. தமிழகத்தில் புதிதாக தொடங்க உள்ள 6 மருத்துவ கல்லூரிகளில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. இந்த மருத்துவ கல்லூரி ஊட்டி அருேகயுள்ள எச்பிஎப். தொழிற்சாலை வளாகத்தில் அமைய உள்ளது.  இதற்காக  அங்கு முதற்கட்டமாக 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்து புதிய கட்டுமான பணிகளை  துவக்க மாநில அரசு முடிவு ெசய்துள்ளது. ஏற்கனவே உள்ள எச்பிஎப்.  தொழிற்சாலை கட்டிடங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், இந்த கட்டிடங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே  பழைய கட்டிடங்களை பயன்படுத்துவதன் மூலம் அந்த கட்டிடங்கள் வீணாவதை தடுப்பது  மட்டுமின்றி, கட்டுமான செலவுகளை குறைக்க முடியும் என பல்வேறு தரப்பினரும்  மாநில அரசிடம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக  அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்காக புதிதாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல்,  ஏற்கனவே உள்ள கட்டிடங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய மாநில  அரசுகளுக்கு ராசா எம்.பி. கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர், மத்திய, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, நான்  கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 1ம் தேதி மத்திய  சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மக்களின் நலன் கருதி மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மனு அளித்தேன். இதன்படி நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக்  கல்லூரி அமைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.  இதற்காக, மாநில அரசு நிலம்  ஒதுக்கியுள்ளது. தற்போது எச்பிஎப். தொழிற்சாலையில் இந்த மருத்துவக்  கல்லூரி அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டே  மூடப்பட்ட எச்பிஎப். தொழிற்சாலை கட்டிடங்களை இதற்கு பயன்படுத்தாமல்,  புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்  மூலம் அரசுகளுக்கு செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், காலதாமதமும்  ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய மாநில அரசுகள், தற்போது உள்ள தொழிற்சாலை  கட்டிடங்களை மருத்துவ கல்லூரிக்கு பயன்படுத்த முன் வர வேண்டும். இதன்  மூலம் இந்த கட்டிடங்களை பாதுகாக்க முடியும். அரசுகளுக்கு செலவும் குறையும்.   இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். தற்போது எச்பிஎப்.  தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகள் போன்றவை  மருத்துவக்கல்லூரி மட்டுமின்றி, மேலும் பல்வேறு தேவைகளுக்கு  பயன்படுத்தும் அளவிற்கு உள்ளது. இந்த கட்டிடங்கள் அனைத்தும்  மிகவும் உறுதியாகவும் உள்ளது. இதனை பயன்படுத்தாமல், புதிதாக  கட்டுமான பணிகளை மேற்கொள்வது என மாநில அரசு எடுத்துள்ள முடிவு அரசியல்  கட்சிகள் மற்றும் பொதுமக்களை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

Related Stories: