×

தமிழக அரசு புதிய இலக்கு 7,000 மக்கள் வசிக்கும் இடங்களில் டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்படும் கடைகள்

குலசேகரம், நவ.29:  ‘குடி குடியை கெடுக்கும்’, ‘மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு’, ‘மதுவை முற்றிலுமாக ஒழிப்போம்’ என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் அரசு, தெருவுக்குதெரு டாஸ்மாக் கடைகளை திறந்து இளைய சமுதாயத்தை மதுவிற்கு அடிமைகளாக மாற்றி வருகிறது. மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் இன்று வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. நாட்டில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்னைகள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றில் பெரும்பாலானவை மதுமயக்கத்தினால் ஏற்படுகிறது.
இன்று சுபநிகழ்ச்சிகள், விழா கொண்டாட்டங்கள் என மது தவிர்க்கமுடியாத அம்சமாகி விட்டது. முன்காலங்களில் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டு சம்பாதிப்பவர்கள் மட்டுமே ஊருக்கு ஒதுக்குபுறமாக மறைவிடங்களில் சென்று மது அருந்தும் நிலை இருந்தது.
இன்று அந்த நிலை மாறி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பெண்கள் விடுமுறை கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்தும் கலாச்சார சீரழிவுகள் வேகமாக பரவுகிறது. சிதைந்துபோன கூட்டு குடும்பவாழ்க்கை நவநாகரீக கலாசாரங்களின் தாக்கங்களால் மது அருந்துவது பேஷனாக மாறிவிட்டது.இதன் விளைவால் விபத்துகள் அதிகரித்து இளம்வயதிலேயே இன்னுயிரை இழக்கும் நிலைக்கு இளைய சமுதாயம் தள்ளப்படுகிறது. நாட்டில் நடைபெறும் விபத்துகளில் மதுபோதையினால் அதிகஅளவு நடைபெறுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

இந்தியாவில் அரசு மதுபான கடைகளை நடத்தி அதிக வருவாய் ஈட்டுவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் அரசு டாஸ்மாக் வருவாயை நம்பியிருக்கும் நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஓவ்வொரு ஆண்டிற்கும் டார்கெட் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக இளைஞர்கள் குடிக்கு அடிமையாவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் போராட்டங்கள் வெடித்தது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெண்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தினர். இவர்களின் போராட்டங்களை அரசு காவல்துறை மூலம் நசுக்கியது. குமரிமாவட்டம் உண்ணாமலைகடையில் நடைபெற்ற போராட்டத்தில் மதுஒழிப்பு போராளி சசிபெருமாள் பலியானார். மதுஒழிப்பு போராட்டத்தை அடக்கிய அதிகாரிகளுக்கு அரசு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தது. அந்த அளவிற்கு தமிழகத்தில் மது திணிக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டதால் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் பெயரளவில் சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் தினமும் நடைபெறும் விபத்துகள் மற்றும் உயிர்பலிகளை கவனத்தில் கொண்ட நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.

இதனையடுத்து அரசு நெடுஞ்சாலைகளிலுள்ள கடைகளை மூடியது. அதில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கிராமபுறங்கள் மற்றும் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகில் திறந்து விற்பனை குறையாமல் பார்த்து கொண்டது. மதுவிலக்கிற்காக போராடியவர்களுக்கு போராட்டத்தின் பலன் கிடைக்கவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் வழியாக நெடுஞ்சாலைகளிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் மனநிறைவடைந்தனர்.இந்நிலையில் கடைகளை அதிகபடுத்தும் நோக்கில் தற்போது 7 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் புதியதாக டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் வேகமாக திறக்கப்பட்டுவருகிறது. பல இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பார் நடத்தி பணம் சம்பாதிக்கும் ஆசையில் சில ஆளும் கட்சியினர் இதற்கு ஆதரவாக உள்ளனர். கடைகளை தேடிபிடிப்பதில் டாஸ்மாக் ஊழியர்களுடன் சேர்ந்து ஈடுபடுகின்றனர். வியாபார நோக்குடன் சிலர் இவர்களுடன் சேர்ந்து கொள்கின்றனர்.இதனை சாதகமாக பயன்படுத்தி டாஸ்மாக் நிர்வாகம் கல்விநிலையங்கள், வழிபாட்டுதலங்கள், மக்கள் வாழ்விடங்களை கவனத்தில் கொள்ளாமல் புதியதாக டாஸ்மாக் கடைகளை திறந்து ஆட்சியாளர்களை திருப்திபடுத்துகின்றனர். பெண்கள் மற்றும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கின்றனர். இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் தமிழகம் சாராய சாம்ராஜ்யமாக மாறி மது அடிமைகள் அதிகம் உள்ள பகுதியாக மாறும் என்று பொதுமக்கள் ஆதங்கபடுகின்றனர்.

Tags : Tamil Nadu ,government ,Task Shop ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...