×

தகவல் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத 8 அதிகாரிகளுக்கு அபராதம்

ஊட்டி, நவ. 29: நீலகிரி மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத 8 அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு மற்றும்  மனுக்கள் மீதான விசாரணை முகாம் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா  முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப்குமார் பேசுகையில் கூறியதாவது:-தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுமக்களுக்கும், பொது தகவல்  அலுவலர்களுக்கும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த கொண்டு வரப்பட்டது.  பொது தகவல் அலுவலர் தம் கடமையில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்றும்,  சட்டத்தினுடைய முக்கியமான பிரிவுகளை குறித்தும், பொது தகவல் அலுவலர்  மனுதாரர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தில் உரிய பதிலை அளிக்க வேண்டும். தகவல்  தர தவறும் பட்சத்தில் பொது தகவல் அலுவலர்கள் கடுமையான நடவடிக்கைக்கு  உட்படுத்தப்படுவார்கள். பிரிவு 20(1), பிரிவு 20(2), பிரிவு 19(8)B  பொதுமக்களுக்கு இழப்பீடு நேரிடும். வரும் காலத்தில் பொது தகவல் அலுவலர்  பொதுமக்கள் கேட்கின்ற அனைத்து தகவல்களையும் தரும் பட்சத்தில் மேல்  குறிப்பிட்ட தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மேல் முறையீட்டு  மனுக்கள் மீதான விசாரணை சென்னைக்கு வர வேண்டும் என்பதால், தற்போது  பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நாங்களே மாவட்டம் தோறும் சென்று  விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பொது தகவல் அலுவலர் மற்றும் மனுதாரர்களை ஒரே  சமயத்தில் அழைத்து விசாரணை மேற்கொண்டு தீர்வு காண நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில்  தற்போது பொதுமக்கள் மத்தியில்  தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  திருநெல்வேலி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான  மனுக்கள் பெறப்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்தே மனுக்கள் அதிகமாக  வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிய  வருகிறது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆணையம்  துவங்கி 14 ஆண்டுகளில் 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில்,  பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் தகவல்  உரிமை சட்டத்தில் கோரப்படும் தகவல்கள் கிடைக்காத பட்சத்தில் மாவட்ட அளவிலான  அதிகாரிகளிடம் முறையிடலாம். அங்கும் பதில் கிடைக்கவில்லை எனில், சென்னையில்  உள்ள தலைமை அலுவலகத்தில் மேல் முறையீடு செய்யலாம். இன்று (நேற்று) 30  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 8 அதிகாரிகள் முறையாக பதில்  அளிக்காத நிலையில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Tags :
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...