×

தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை இத்தலாரில் டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கெடு

மஞ்சூர், நவ.29: இத்தலாரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை பிரச்னை தொடர்பாக தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மஞ்சூர் அருகே உள்ளது இத்தலார் பகுதியை சுற்றி பெம்பட்டி, பேலிதளா, போர்த்தி, இந்திரா நகர், வினோபாஜி நகர், கோத்த கண்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.  இத்தலார் பஜார் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி டாஸ்மாக் ஒன்று உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. குடிமகன்கள் குடிபோதையில் பெண்களை கேலி செய்வதாகவும், காலி பாட்டில்களை நடுரோட்டில் வீசுவதாகவும், மதுபான பாரில் ஒலிபெருக்கி மூலம் சத்தமாக பாடல்களை ஒளிபரப்பி விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியும் வந்தனர். ஆனால் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் இத்தலார் சுற்று வட்டார கிராமங்களை ஒருங்கிணைத்து குழு ஒன்றை அமைத்தனர். டாஸ்மாக் மதுபான கடையை அகற்றகோரி கடந்த 18ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் மதுக்கடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தாசில்தார் சரவணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் மேலாளர் மகாராஜ் மற்றும் இத்தலார் ஊர் தலைவர் சுரேஷ் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஊர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் டாஸ்மாக் கடையால் ஏற்படும் பாதிப்புகளை கூறிய பொதுமக்கள் உடனடியாக மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், டாஸ்மாக் கடை 16 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், கடையை உடனடியாக அகற்ற முடியாத சூழலில் ஒன்றரை மாத கால அவகாசம் தேவைப்படுவதால் ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் கடையை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதற்கு கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இத்தலாரை சுற்றியுள்ள 7 ஊர்களை சேர்ந்த பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்பதால் டிசம்பர் 10ம் தேதிகுள் டாஸ்மாக் மதுக்கடையை மூடவோ அல்லது அங்கிருந்து மாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக 3 தினங்களுக்குள் டாஸ்மாக் மேலாளர் முடிவு அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், கமிட்டி உறுப்பினர்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாக கிராம பிரமுகர்கள் தெரிவித்தனர்.

Tags : negotiations ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...