ஊட்டியில் சரக்கு லாரியில் ஆட்களை ஏற்றி சென்றதால் ஓட்டுநருக்கு அபராதம்

ஊட்டி, நவ. 29:  ஊட்டி நகரில் சரக்கு லாரிகளில் ஆட்களை ஏற்றி சென்றவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.தமிழகத்தில் பயணிகள் வாகனங்களை தவிர்த்து லாரி, பிக்அப் போன்ற சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விவசாயம் பெரும்பான்மையான பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக நாள்தோறும் தொழிலாளர்களை தடையை மீறி லாரிகள், பிக்அப் போன்ற வாகனங்களில் ஏற்றி செல்லப்படுகின்றனர். காய்கறி மூட்டைகளின் மீது அமர்ந்து லாரிகளில் பயணிக்கின்றனர். இது போன்ற சமயங்களில் அவ்வப்போது இவ்வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் விதிமுறை மீறி லாரிகளில் ஆட்கள் ஏற்றி செல்வது தொடர்கிறது.

இந்நிலையில் காய்கறி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரியை ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் வைத்து ஊட்டி நகர ேபாக்குவரத்து காவல்துறையினர் பிடித்தனர். சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநருக்கு அபராதம் விதித்தனர். பின் லாரிகளில் ஆட்கள் ஏற்றி செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்கள். இது குறித்து ேபாக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், லாரிகள், பிக்அப் போன்ற சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்வது சட்டப்படி குற்றம். இதனால் விபத்துகள் ஏற்படும்போது உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தவிர்க்க வேண்டும். மீறி அவ்வறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும், என்றனர்.

Related Stories:

>