×

தடுப்பு வேலி அமைப்பு, ஊழியர் - போலீஸ் உணவுச்செலவு எம்பி தேர்தல் பணி செய்ததற்கு இன்னும் பணம் பைசலாகவில்லை

தேனி, நவ. 28: மக்களவை தேர்தலின்போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்காக உணவு, தடுப்பு கம்பிகள் போன்றவற்றை அமைத்த கான்ட்ராக்டர்களுக்கு செலவுத் தொகையை தேர்தல் ஆணையம்  இதுவரை பைசல் செய்யாததால் அவர்கள் புலம்பி வருகின்றனர். மக்களவை 17வது பொதுத் தேர்தல் பல கட்டங்களாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 எம்பிதொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக  ஏப்.18ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து வாக்கு எண்ணிக்கை கடந்த மே   23ம் தேதி நடந்தது. தேனி மாவட்டத்தில் தேனி எம்பி தொகுதி மட்டுமல்லாது ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்.18ம் தேதி நடந்து  மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்து முடிந்து சுமார் 35 நாட்கள் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.  
        
வாக்கு எண்ணும் பணியில் சுமார் 400 அரசு பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் தவிர சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையானது மே 23ம் தேதி காலை துவங்கி அன்றைய தினம் நள்ளிரவு வரை தொடர்ந்து மே 24ம் தேதி அதிகாலை வரை நடந்தது. எனவே, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட அரசுபணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு வாக்கு எண்ணும் நாளான மே 23ம்தேதியன்று காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்பட்டது. இதனையும் காண்டிராக்டர் மூலமாக உணவு வழங்கினர்.இத்தகைய தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கான உணவு செலவுத் தொகை, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புக்காக வேலி அமைத்த செலவுத் தொகை என  பல லட்ச ரூபாய் கடந்த ஆறுமாதங்களாக வழங்கப்படாமலேயே உள்ளது. இச்செலவுத் தொகையை வழங்கக்கேட்டு கான்ட்ராக்டர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு அலையாய், அலைந்தும் இதுவரை செலவுத் தொகை வராததால் கான்ட்ராக்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

Tags : employee - police food ,
× RELATED தடுப்பு வேலி அமைப்பு, ஊழியர் - போலீஸ்...