×

கப்பலூர் டோல்கேட்டில் டூவிலர் பாதையில் செல்லும் பஸ்கள் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு

திருமங்கலம், நவ.28:  கப்பலூர் டோல்கேட்டில் டூவிலர் பாதையில் அரசு பஸ்களுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூரில் டோல்கேட் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள இந்த டோல்கேட்டில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டணம் முறை அமல்படுத்தப்பட உள்ளது. 10 கவுன்டர்கள் உள்ள இந்த டோல்கேட்டில் 1 மற்றும் 10வது கவுன்டர்களில் மட்டுமே ரொக்க பணம் கட்டி செல்லும் வாகனங்கள் வரும் 1ம் தேதி முதல் செல்ல முடியும். 2 முதல் 9 வரையில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் மின்னணு முறையிலான பாஸ்டேக் கட்டண கவுன்டர்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் டூவிலர், ஆட்டோக்கள் செல்லும் வழித்தடத்தில் அரசு பஸ்கள் செல்லவேண்டும் என டோல்கேட் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டோல்கேட்டில் ஊழியர்களை நிறுத்தி கட்டாயப்படுத்தி டூவிலர் வழித்தட பகுதியில் அரசு பஸ்கள், 108 உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பப்படுகின்றன. இது டோல்கேட்டினை டூவிலரில் கடந்து செல்லுவோரிடம் விபத்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் 1 மற்றும் 10ம் நம்பர் டிக்கெட் கவுன்டர்களில் ரொக்கபணம் கட்டி செல்லும் வாகனங்கள் செல்லாம் என அறிவித்த டோல்கேட் நிர்வாகம் அதில் அரசு பஸ்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது டூவிலர்கள் டோல்கேட்டினை கடந்து செல்லும் பகுதியில் அரசு பஸ்களை மாற்றி இயக்கி வருவதால் 1 மற்றும் 10ம் கவுன்டர்களையும் பாஸ்டேக் கட்டண கவுன்டர்களாக டோல்கேட் நிர்வாகம் முயற்சிப்பதாக வாகன ஓட்டிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து திருமங்கலம் கல்யாணசுந்தரம் கூறுகையில், கப்பலூரில் டோல்கேட் துவக்கப்பட்ட காலம் முதல் டூவிலர்கள், ஆட்டோக்கள் செல்ல தனிப்பாதை இருந்து வருகிறது. கட்டணம் இல்லாத இந்த பாதையில் தற்போது அரசு பஸ்களை இயக்க டோல்கேட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. மதுரை ரிங்ரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்ககப்பட்ட மூன்று டோல்கேட்டுகளில் டூவிலர் செல்ல பாதை வசதியில்லை. அதுபோல் இங்கும் ஆரம்பித்து விட்டார்களோ என எண்ண தோன்றுகிறது. டூவிலர்களின் முன்பும் பின்பும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது டோல்கேட் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே ஏற்கனவே இருந்தபடியே கப்பலூர் டோல்கேட்டில் டூவிலர் செல்ல தனிபாதையை தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஸ்டேக் முறையில் செல்லாத வாகனங்கள் குறிப்பாக அரசு டவுன்பஸ்கள் கவுண்டர்1 மற்றும் 10ல் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்றார்.

Tags : route ,Kapoor Talgate ,accidents ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்