×

அரசு விழாவுக்கு மின்சாரம் திருட்டு நிலக்கோட்டை அருகே பரபரப்பு

வத்தலக்குண்டு, நவ. 28: நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் நடந்த அரசு விழாவிற்கு மின்சாரம் திருடி சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கோட்டாட்சியர் உஷா வரவேற்றார். நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி, சென்னை இணை இயக்குனர் உமாபதி உள்ளிட்டோர் பேசினர்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து தையல் மிஷின், கைத்தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நிலக்கோட்டை வட்ட வழங்கல் அதிகாரி சரவணவாசன், அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு மின்சாரம் விழா பந்தலையொட்டி சென்ற மின்வயரிலிருந்து கொக்கி போட்டு திருடப்பட்டிருந்தது. இதை கண்ட பொதுமக்கள் சிலர், ‘நாங்கள் இதை செய்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள், ஆனால் இதை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்’ என முணுமுணுத்து சென்றனர்.

Tags : Nilakkottai ,
× RELATED நிலக்கோட்டை அருகே ஊழியர் பணம் திருடி...