×

ஒட்டன்சத்திரத்தில் காவலர் பற்றாக்குறையால் கூடும் குற்றச்சம்பவங்கள்

ஒட்டன்சத்திரம், நவ. 28: ஒட்டன்சத்திரத்தில் காவலர்கள் பற்றாக்குறையால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒட்டன்சத்திரம் காவல்நிலையம் 1950ம் ஆண்டு 4.22 ஏக்கர் நிலப்பரப்பில் துவக்கப்பட்டது. இந்த காவல்நிலையத்திற்கு ஒட்டன்சத்திரம், அரசப்பிள்ளைபட்டி, கே.அத்திக்கோம்பை, கேதையுறம்பு, பலக்கனூத்து, நீலமலைக்கோட்டை,கோடல்வாவி, வடகாடு மற்றும் 88 குக்கிராமங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒட்டன்சத்திரம் நகர் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ஒரு ஆய்வாளர், 6 சார்பு ஆய்வாளர்கள், 5 தலைமை காவலர்கள், 5 முதல்நிலை காவலர்கள், 36 இடைநிலை காவலர்கள் என 53 காவலர்களை கொண்டு செயல்பட்டு வந்தது.

இந்த எண்ணிக்கை தற்போது மக்கள்தொகைக்கு ஏற்ப கூடியிருக்க வேண்டும். மாறாக குறைந்துதான் உள்ளது. தற்போது ஒரு ஆய்வாளர், ஒரு சார்பு ஆய்வாளர் உள்பட 15 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நகரில் நடக்கும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி, செக்போஸ்ட், அண்ணாநகர், குறிஞ்சிநகர், தும்மிச்சம்பட்டி, இபி ஆபீஸ், அத்திக்கோம்பை, வடகாடு பகுதிகளில் தொடர்ந்து நகை திருட்டு, வழிப்பறி, வாகன திருட்டு, பிக் பாக்கெட் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் காவலர்கள் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே மாவட்ட கண்காணிப்பாளர் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு...