×

பழநி கிராமங்களில் அனுமதியில்லாத வழித்தடத்தில் இயக்கப்படும் மினிபஸ்கள்

பழநி, நவ. 28: பழநி பகுதி கிராமங்களில் அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் இயங்கும் மினிபஸ்கள் மீது ஆர்டிஓ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகரை சுற்றிலும் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பல ஊர்களுக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. பொதுமக்கள் வசதிக்காக மினிபஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இக்கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பல மினிபஸ்கள் தற்போது உரிய வழித்தடங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் பல கிராமங்களில் மக்கள் மினிடோர் ஆட்டோக்களிலும், மினிவேன்களிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டியதாகிறது. இதுகுறித்து கோதைமங்கலத்தை சேர்ந்த செல்லமுத்து கூறியதாவது,

பழநி ரெணகாளியம்மன் கோயிலில் இருந்து புதுதாராபுரம் சாலையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14ம் அணி, உபமின் நிலையம் வழியாக கோதைமங்கலத்திற்கு வந்து பின், மொல்லம்பட்டி பிரிவு வரை மினிபஸ் இயக்க வேண்டுமென 2 மினிபஸ்களுக்கு வழித்தடம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 2 மினிபஸ்களும் கோதைமங்கலத்திற்கு உள்ளே வருவதில்லை. மாறாக, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை விட கூடுதலாக 6 கிலோமீட்டர் தூரம் சென்று பள்ளிக்கூடத்தான்வலசு கிராமத்திற்கு செல்கிறது. இதனால் கோதைமங்கலத்தில் வசிக்கும் மக்கள் போதிய பஸ்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுபோல் பழநி பகுதியில் இயங்கும் சில மினிபஸ்களும் உரிய வழித்தடங்களில் இயக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட ஆட்சியர் போன்றோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : villages ,Palani ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை