×

வீட்டுமனை பட்டா கேட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

பொங்கலூர், நவ. 28:   வீட்டுமனை பட்டா கேட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம்  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலானோருக்கு அரசு நிலம் இருந்தும் வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் பல்வேறு கட்சியினர் சார்பில் அரசு நிர்வாகத்திற்கு வீட்டு மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அனுப்பட்டி, கள்ளிமேடு, புளியம்பட்டி, 63 வேலம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மா.கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.    இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்து விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags : office siege ,Palladam Vatatasheer ,
× RELATED ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் வழங்க மறுப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை