×

மக்காச்சோள பயிர்களை தாக்கும் புழுக்களை அழிக்கும் மருந்துக்கு பணம் கேட்கும் அதிகாரிகள்

உடுமலை, நவ. 28:  உடுமலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ஆர்.டி.ஓ. இந்திர வள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் உடுமலை தாசில்தார் தயானந்தன், மடத்துக்குளம் தாசில்தார் ஜெயசிங், சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் பேசியதாவது: ‘பாலின் நச்சுத் தன்மையை ஆராய உரிய ஆய்வு கூடம் தமிழகத்திலேயே இல்லை. எனவே விவசாயிகள் அச்சத்தை போக்க பாலின் தன்மையை ஆராய ஆய்வு கூடம் அமைத்து தர வேண்டும். வாளாவாடியில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டிப்பாதையை அகற்றக்கூடாது. விளைநிலங்களில் தற்சமயம் காட்டு பன்றிகள் பயிர்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பாலதண்டபாணி கூறியதாவது: ‘பி.ஏ.பி. மருள்பட்டியில் கிளை கால்வாய் பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பு உள்ளதால் பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை வி.ஜி. ராவ் நகரில் உள்ள துவக்கப்பள்ளி சமூக விரோதிகள் கூடாரமாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சாளையூர், மானுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் ஒதுக்கவில்லை. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள உலர் களத்தில் இலவசமாக மக்காச்சோளம் காய வைக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். விவசாயி செல்வராஜ் பேசியதாவது: மக்காச்சோளப் பயிர்களை தாக்கி வரும் படைப்புழுத்தாக்குதல் மருந்துக்கு மலையாண்டிபட்டினத்தில் அதிகாரிகள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாரபட்சம் இன்றி அனைத்து விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதல் மருந்து வழங்க வேண்டும். அதனை பொதுவான அரசு இடத்தில் வைத்து வழங்க வேண்டும். தோட்டக்கலை சார்பில் வெங்காய விதைகள் உடனே வழங்க வேண்டும். நகராட்சி சந்தையில் சுகதார சீர்கேடு மிகுந்து காணப்படுவதால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி சந்தைக்கு அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவ மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.விவசாயி செளந்தர் ராஜன் கூறியதாவது:

உடுமலையில் உள்ள ராஜேந்திரா ரோடு பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தளி சாலையில் கழிவுநீர் வெளியேறுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் பகுதியில் உள்ள காட்டுபன்றிகளை விரட்ட உரிய அனுமதி வாங்கி இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் காட்டு பன்றிகளை வனத்துக்குள் விரட்ட உரிய அனுமதி வாங்க வனத்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே மற்ற மாவட்டங்களை போன்று உரிய அனுமதி வாங்க மாவட்ட  வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய வாளவாடியில் பி.ஏ.பி. வாய்க்காலை அருகில் உள்ள பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து 10 ஆண்டுகள் ஆகியும் பொதுப்பணித்துறையினர்  அகற்றாததால், அவ்வழியாக பாசனம் செய்து வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு