×

நூறு நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை: டி.ஆர்.பாலு புகார்

சென்னை: நூறு நாள் வேலைத் திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். சென்ற அக்டோபர் முதல் கடந்த மூன்று மாதங்களாக நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் கிராமப் புற ஏழை எளிய மக்கள் தங்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை என்று திமுக நடத்திவரும் கிராம சபைக் கூட்டங்களில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, திமுக பொருமாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதி உள்ள அவசரக் கடிதம் வாயிலாக இந்த பிரச்னையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக டி.ஆர்.பாலு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கிராம மக்கள் சபைக் கூட்டங்கள் நடத்தி, அதன் வாயிலாக கிராமப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறது. மக்கள் குறைகேட்கும் இக்கூட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டங்களில், கிராமம் பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், அக்டோபர் மாதம் முதல் சென்ற மூன்று மாதங்களாக தங்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நூறு நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் அரசுப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை உறுதிப்படுத்தும் திட்டமாகும். இதில் பணியாற்றும் மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்காமல், அதுவும் மூன்று மாதங்களாக வழங்காமல் தாமதம் செய்வது எழைத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் சிதைப்பதுடன் அவர்கள் ஆரிருளில் விடும் கொடுமை ஆகும். எனவே, இந்த பிரச்னையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நிதியை வழங்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும், அனைவருக்கும் மூன்று மாதங்களாக வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் அனைத்தையும் வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post நூறு நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை: டி.ஆர்.பாலு புகார் appeared first on Dinakaran.

Tags : DR ,Balu ,Chennai ,Central Minister ,Narendra Singh Tomar ,
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...