×

நாளை நடக்கிறது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் குளறுபடி

திருச்சி, நவ.28: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.2019-2020ம் ஆண்டுக்கான மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதில் நிரப்பப்பட்டதுபோக மீதியுள்ள இடங்கள் 62க்கு 7:2 என்ற விகிதத்தில் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியலில் 2003-2004ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு முறையாக நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்யாமல், 1,400 முதுகலை ஆசிரியர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு 2005-2006ல் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அப்பட்டியலில் பெரும்பான்மையான பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் உயர்விலும் கலந்துகொண்டு பதவி உயர்வை துறந்தவர்கள். இவர்கள் 3 ஆண்டுகள் கழித்து தான் பதவி உயர்வு பட்டியலுக்கு (2021ம் ஆண்டு) விண்ணப்பிக்கவே முடியும். இப்படியிருக்க இந்த பட்டியல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலர், ஆணையர், இயக்குனர் இவர்களுடைய ஒப்புதலும், அனுமதியில்லாமலும் கல்விதுறை அலுவலர்களால் வெளியிடப்பட்டதா என பெரும் குழப்பத்தை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதில் உள்ள குழப்பத்தை நீக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனால் பாதிக்கப்பட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சென்னை, மதுரை ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளதால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...