×

நாகர்கோவில் மாநகரில் 10 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு போதிய பணியாளர்கள் இல்லாததால் சரி செய்வதில் சிக்கல்

நாகர்கோவில், நவ.28:  நாகர்கோவில் மாநகராட்சியில் சுமார் 10 இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் வீணாக செல்கிறது. போதிய பணியாளர்கள் இல்லாததால் இவற்றை சரி செய்ய முடியாத நிலை உள்ளது.
நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை கடந்த கோடை காலத்தில் வறண்டது. இதனால் நாகர்கோவில் மாநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதே அபூர்வமாக இருந்தது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும், மாநகராட்சி ஆணையரும் மாறி, மாறி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.தற்போது பெய்த மழை காரணமாக முக்கடல் அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால், இன்னும் ஒரு வருட காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும், அதற்குள் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து தினமும் குடிநீர் வினியோகம் இருக்கும் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது. டெரிக் சந்திப்பு, கோட்டர் கணபதிநகர், டி.வி.டி. காலனி, கிருஷ்ணன்கோவில் சந்திப்பு, ஆறாட்டு ரோடு  உள்பட நகர் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்ற வண்ணம் உள்ளது. இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் தட்டுப்பாடு சமயத்தில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. பலமுறை போனில் தகவல் தெரிவித்தாலும் கூட, அதிகாரிகள் சிலர் அலட்சியமாக பதில் தருவதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.  நாட்டில் இனி எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தான் பெரிய அளவில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நீர் நிலைகள் பாதுகாப்பு, குடிநீர் சிக்கனம் அவசியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரும் நிலையில், மாநகர பகுதியில் இப்படி குடிநீர் குழாய்கள்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருவது வேதனையை தருவதாக, பொதுமக்கள் கூறினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசுகையில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. அவர்கள்தான் பணியாளர்களை நியமித்து உடைப்பை சரி செய்து வருகிறார் என்றனர். போதிய பணியாளர்களை ஒதுக்காமல், குறைந்த அளவு பணியாளர்களை வைத்து இந்த வேலைகளை செய்வதால், குழாய் உடைப்பை சரி செய்ய தாமதம் ஆகிறது என கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவது போல், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நேரடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய முன் வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் ெகாண்டுள்ளனர்.

Tags : drinking water pipe breakdown ,city ,Nagercoil ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்