×

உத்திரமேரூரில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும்

உத்திரமேரூர், நவ.28: உத்திரமேரூர் பேரூராட்சி நூக்காலம்மன் கோயில் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. கடந்த 1999ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நீதிமன்றத்தில் உத்திரமேரூர், பெருநகர், சாலவாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யும் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். நீதிமன்றத்துக்கு தினமும் வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர்கள் உள்பட பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் போதிய இடவசதி, அடிப்படை வசதியின்றி உள்ளது.நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், போலீசார், பொது மக்கள் என அனைவரது வாகனங்களும் நிறுத்த இடமில்லாமல் உள்ளது. இதனால், அனைத்து வசதிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் கடந்த 2011ம் ஆண்டு உத்திரமேரூர் அடுத்த வேடப்பளையம் கிராமத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. நிலம் ஒதுக்கி 8 ஆண்டுகளாகியும் இதுவரை, நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவில்லை.
இந்நிலையில் புதிய நீதிமன்றம் அமைய உள்ள இடத்தின் அருகில் உள்ள சாலைக்கு பதிலாக மாற்று சாலை வழங்கப்பட்டுள்ளது. அந்த சாலையை, சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்பு மற்றும் சேதப்படுத்தி வருகின்றனர்.எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய  நீதிமன்ற கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி, அதற்கான  பணிகளை துவங்க வேண்டும் என உத்திரமேரூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சேதப்படுத்தியவர்கள் குறித்து  உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...